புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போது, ஆளும்கட்சிக்கும் ஜேவிபி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிடுகையில், “1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை கைவிடவேண்டுமென அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்ற வேண்டும் என்ற வகையில் நாட்டின் நன்மை கருதி அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அதில் குழப்பங்களை ஏற்படுத்தாது, தற்போது ஏற்பட்டுள்ள தக்க தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.