அவர்கள் தானே (Thane) பகுதிக்குள் நுழைந்தவுடன்
இப்பெருநகரம் அதிர்ச்சியில் உறைந்துப்போனது.
அவர்கள் கால்களில் செருப்புகள் இல்லை.
அவர்கள் கைகளில் செங்கொடிகள் பறக்கின்றன.
சிபிஎம் விவசாய சங்கங்கள் அவர்களை வழிநடத்துகின்றன.
புழுதிப்படர்ந்த பாதங்களின் காயங்களும் காயத்தின் வடுக்களும் மும்பை மாநகரின் வெளிச்சத்தைக் கண்கூச வைத்தன.
முதல்முறையாக இப்பெருநகரம் வெட்கி தலைகுனிந்தது.
செங்கொடிகள் எப்போதும் பிச்சை எடுப்பதில்லை என்பதால்
பெருநகரப் புதல்வர்களின் ஏடிஎம் எந்திரங்கள் மவுனித்தன.
பெருநகரம் மனிதர்களைக் கண்டு வணங்கியது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு பணிந்தது.
மராட்டிய மண்ணின் விவசாயிகளுக்காக அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும்
கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள்!
அரசு பணிந்திருக்கிறது.
ஷேர்மார்க்கெட் பணத்தைக் கொட்டலாம்
ஆனால் அந்தக் காகிதத்தைத் தின்று கழுதைகள் கூட
உயிர்வாழ முடியாது.
அவர்கள் சேற்றில் கால்வைத்தால் தான்
இப்பெருநகரமும் சோற்றில் கை வைக்க முடியும்.
மனிதர்களை தங்கள் மண்ணில் கண்ட பெருநகரம்
இன்னும்… தூங்காமல் விழித்திருக்கிறது.
செங்கொடி பறக்கட்டும்.
மனிதர்கள் வாழட்டும்.
மண் செழிக்கட்டும்.
(மும்பாயிலிருந்து நமது நிருபர் Puthiyamaadhavi Sankaran)