ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் கடந்த 15ஆம் திகதி தலைநகர் காபூலுக்குள் நுழைந்ததையடுத்து, ஜனாதிபதி அஷ்ரப் கானி, அன்றைய தினம் விமானப் படை விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.
தஜிகிஸ்தானுக்கு சென்ற அவருடைய விமானத்தை தரையிறங்க அந்நாடு மறுத்ததையடுத்து, அவர் தற்போது ஓமானில் தஞ்சமடைந்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ரப் கானி விமானத்தில் புறப்பட்ட போது 4 கார்களும், ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிக் கொண்டு சென்றதாகவும் ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ஆப்கான் மக்களின் வரிப்பணத்துடன் தப்பியோடிய அஷ்ரப் கனியை கைது செய்ய வேண்டும் என்று தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கான் தூதரகம், இண்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்தல்லா மொஹிப், பசல் மக்மூத் பஸ்லி ஆகியோரை பொதுமக்களின் பணத்தை திருடிச் சென்ற குற்றத்துக்காக கைது செய்ய வேண்டும் என்றும் ஆப்கான் தூதரகம் கோரியுள்ளது.