குவாஹாட்டில் மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குவாஹாட்டியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். கொண்டுவரும் வழியிலேயே ஒருவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மற்றொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்’ என்றார். 3 பேர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
வங்கதேசம் உள்ளிட்ட 3 நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க வகைசெய்யும் மசோதாவை மத்திய அரசு இயற்றியது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு வங்கதேசத்திலிருந்து வெளியேறி அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று கடந்த 1985-ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
ஆனால், நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அஸ்ஸாம் முழுவதும் மாணவர் சங்கங்கள் உள்ளிட்டவை போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த மசோதா சட்டமானால், அஸ்ஸாமில் உள்ள பழங்குடியினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டம் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், அதை மீறி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர் சங்கத்தினர், விவசாயிகள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகப் பெரிய பேரணிக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இசைக் கலைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
‘கறுப்பு தினம்’:
போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக, டிசம்பர் 12-ஆம் தேதியை ஆண்டுதோறும் ‘கருப்பு தினமாக’ அனுசரிக்கப் போவதாகத் தெரிவித்தனர்.
ராங்கியா பகுதியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல் துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, வானத்தை நோக்கி காவல் துறையினர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மோதல்-தடியடி:
குவாஹாட்டியில் மாநில காவல் துறைத் தலைமை இயக்குநரின் கார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கினர். பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். மாநிலத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், குவாஹாட்டி, தின்சுகியா, திப்ரூகர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.
போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. லகிம்பூர், சராய்தேவ், கோலாகாட் உள்ளிட்ட மாவட்டங்களில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை.
காவல் அதிகாரிகள் மாற்றம்:
மாநிலத்தில் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக குவாஹாட்டி காவல் ஆணையராக இருந்த தீபக் குமார் நீக்கப்பட்டு, முன்னா பிரசாத் குப்தா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இணைய சேவை துண்டிப்பு:
போராட்டம் காரணமாக காம்ரூப், சிவசாகர், திப்ரூகர், ஜோர்ஹாட், கோலாஹாட், சராய்தேவ் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இணைய சேவைகள் ஏற்கெனவே துண்டிக்கப்பட்டிருந்தன. இது மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
அனைத்து விமானங்களும் இரத்து:
போராட்டம் காரணமாக, அஸ்ஸாமில் அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டன. இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும் மாநிலத்துக்கு இயக்கப்பட வேண்டிய விமானங்களை இரத்து செய்தன.
இதன் காரணமாக, குவாஹாட்டி, திப்ரூகர் விமான நிலையங்களில் பயணிகள் பலர் சிக்கினர். மாநிலத்தில் சாலைப் போக்குவரத்தும் முடங்கியதால், விமான நிலையத்திலிருந்த பயணிகள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் படிப்படியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்தது. மற்ற மாநிலங்களிலிருந்து அஸ்ஸாமுக்கு இயக்கப்பட வேண்டிய ரயில்களின் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.
அமைதி காக்க வேண்டும் – ஆளுநர், முதல்வர் வேண்டுகோள்
போராட்டம் தொடர்பாக, மாநில ஆளுநர் ஜக்தீஷ் முகி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
‘அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது அதிருப்தி இருந்தால், அதை ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில் தெரிவிக்க வேண்டுமே தவிர, சட்டத்தை மக்கள் கையிலெடுக்கக் கூடாது.
மாநில மக்களின் கலாசாரம், மொழி, உரிமைகள் உள்ளிட்டவற்றைக் காப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பொதுமக்கள் யாரும் அரசு சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது. அனைவரும் ஆர்ப்பாட்டத்தைத் தவிர்த்து அமைதி காக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்எல்ஏ வீட்டுக்குத் தீ வைப்பு
அரசு அலுவலகங்கள், கடைகள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் தாக்கினர். டயர்கள் உள்ளிட்டவற்றை எரித்து சாலைகளில் போக்குரத்தை தடுத்து நிறுத்தினர். இதனிடையே, சபூவா தொகுதி எம்எல்ஏ வினோத் ஹசாரிகா வீட்டுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர். அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும், அவரது அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது.