காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிட சுப்ரீம் கோர்டுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தின் நலனை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு காலில் போட்டு மிதித்துள்ளது.
கர்நாடக கட்சிகள் ஒற்றுமை
கர்நாடகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து வருகிறது.
கூட்டாட்சி முறைக்கு எதிரானது
நடுநிலையோடு நடக்க வேண்டிய மத்திய அரசு கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கூறியிருப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது.
ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு; மற்றொரு கண்ணுக்கு வெண்ணெய்
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை வெறும் பரிந்துரை என்ற வாதத்தை திரும்பப் பெற்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, மற்றொரு கண்ணுக்கு வெண்ணெய் என்ற போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.
ராஜினாமா செய்ய வேண்டும்
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தின் நியாயத்தை நிலைநாட்ட பாடுபட வேண்டும். அப்படி அழுத்தம் கொடுக்க இயலவில்லை என்றால் அவர்கள் அனைவரும் எம்.பி. பதவிய ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.