தமிழரசுக்கட்சிக்கும் ரெலோவிற்கும் இடையிலான ஆசனப்பங்கீடு குறித்த விடயங்க தொடர்பிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், ரெலோ தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 06-12-2017நடைபெறுவதாக இருந்தபோதும் ஏற்கனவே நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் பிரகாரம் சம்பந்தன் திருகோணமலைக்கு செல்ல வேண்டியேற்பட்டதன் காரணமாக குறித்த சந்திப்பு எதிர்வரும் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல்களைச் செய்வதற்காகவும் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்காகவுமே இரா.சம்பந்தன் அங்கு சென்றுள்ளதோடு மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்கவுள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் பணிப்பின் பிரகாரம் ஆசனப் பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடான நிலைமை குறித்து கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ரெலோவின் தலைவரும் பிரதி குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலாநாதன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது ஆசனப்பங்கீடு தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ள இடங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன மாற்றுவழியை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முன்மொழிவுகள் தொடர்பிலும் ரெலோவின் முன்மொழிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் சுமந்திரன் பேசுவது என்றும் ரெலோ உறுப்பினர்களுடன் செல்வம் அடைக்கலநாதன் கலந்துரையாடுவது என்றும் இதன்மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக்காண முயல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.