இதேவேளை, ஆப்கானிஸ்தானின் ஆயுதப் படைகளின் முன்னாள் விமானிகள், படைவீரர்களையும் தம்முடன் இணையுமாறு தலிபான் கோரியுள்ளதாக, தலிபான்களின் முடிவெடுப்பதை அறிந்த ஹஷிமி குறிப்பிட்டுள்ளார்.
ஹஷிமியின் இக்கருத்தானது கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை தலிபான் அதிகாரத்தில் இருந்ததை பிரதிபலிக்கிறது. அப்போதைய தலிபான்களின் தலைவர் முல்லா ஓமர் நிழலாக இருக்க, நாட்டை சபை ஒன்றே நடத்தியிருந்தது.
இந்நிலையில், சபையின் தலைவருக்கு மேலான வகிபாகம் ஒன்றை அகுன்ட்ஸடா வகிப்பார் என ஹஷிமி குறிப்பிட்டுள்ளார்.
தவிர, அகுன்ட்ஸடாவின் பிரதித் தலைவர் ஜனாதிபதியின் வகிபாகத்தை ஆற்றுவார் என ஹஷிமி தெரிவித்துள்ளார்.
தலிபான்களுக்கு, முல்லா ஓமரின் மகனான மெளலவி யகூப், சக்தி வாய்ந்த ஹக்கானி வலையமைப்பின் தலைவரான சிராஜுதின் ஹக்கானி, கட்டார் தலைநகர் டோஹாவிலுள்ள தலிபானின் அரசியல் அலுவலகத்துக்குத் தலைமை தாங்கும் அப்துல் கானி பர்டார் ஆகியோர் பிரதித் தலைவர்களாகக் காணப்படுகின்றனர்.
இதேவேளை, ஜனாநாயகம் ஒன்றாக ஆப்கானிஸ்தான் காணப்படாது எனத் தெரிவித்த ஹஷிமி, ஷரியா சட்டத்தையே அமுல்படுத்துவோம் எனக் கூறியுள்ளார்.