ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நேவல்னி உள்ளிட்ட 900 பேர், நேற்று முன்தினம் (26) கைது செய்யப்பட்டனர். மோசடிக்கெதிராக, தடையினை மீறி, ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சொத்து சாம்ச்சியமொன்றை, இலாபமற்ற நிறுவனங்களின் நிழல் வலையமைப்பூடாக, பிரதமர் டிமித்திரி மித்வேவ் கட்டுப்படுத்துகிறார் என்ற விவரமான அறிக்கையை இம்மாதம் பிரசுரித்திருந்த நேவல்னி, ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
குறித்த அறிக்கையானது, யூடியூப்பில் 11 மில்லியன் தடவைகள் பார்வையிடப் -பட்டிருந்தபோதும், இது தொடர்பில், பிரதமர் மித்வேவ், கருத்து எதனையும் வெளியிட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற மிகப்பெரும் ஆர்ப்பாட்டமாக, நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. 7,000 தொடக்கம் 8,000 வரையானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்துக்கு நேவல்னி சென்றபோதே, பொலிஸார் அவரைத் தடுத்துவைத்ததுடன், பொலிஸ் மினிவானில் அவரை வைத்திருந்தனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த வானை, குறிப்பிட்ட நேரம் தடுத்து வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மொஸ்கோவில், ஏறத்தாழ 500 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், செயற்பாட்டாளர்களின் தடுப்பைக் கண்காணிக்கும் இணையத்தளமான ஒ.வி.டி-இன்போ, குறைந்தது 933 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சென். பீற்றர்ஸ்பேர்க்கில் 130 பேர் கைதுசெய்யப்பட்டதாக இன்டர்பக்ஸ் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. சென். பீற்றர்ஸ்பேர்க்கின் நகர மத்தியில், 4,000 பேர் வரையானோர் கூடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நெவன்லிக்கு, பொலிஸ் அதிகாரியொருவருக்கு கீழ்ப்படியாமை காரணமாக, 15 நாட்கள் சிறைத்தண்டனையும் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்ததுக்காக 20,000 ரூபிள்கள் அபராதமும் நீதிமன்றமொன்றினால் நேற்று (27) விதிக்கப்பட்டுள்ளது. 99 ரஷ்ய நகரங்கள் ஆர்ப்பாட்டத்துக்குத் திட்டமிட்டதாகவும் ஆனால், அவற்றில் 72இன் உள்ளூர் அதிகாரிகள், அனுமதியை வழங்கியிருக்கவில்லை என தனது இணையத்தளத்தில் நேவன்லி தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தனது திட்டங்களை நேவன்லி அறிவித்திருந்தபோதும், பணமோசடிக் குற்றச்சாட்டில், குற்றம்புரிந்தவராக, கடந்த மாதம் நேவன்லி கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை காரணமாக, ஜனாதிபதித் தேர்தலில், அவர் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.