ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இறுதி மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் தேர்தல் ஜூன் 1ஆம் திகதி நடைபெற உள்ளது. இதுவரை 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது.
ஜூன் 1 ஆம் திகதி உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், பீகார், இமாச்சலபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா, பஞ்சாப், சண்டிகார் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் அன்றைய தினம் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இறுதி கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று (30) மாலையுடன் நிறைவு பெறுகிறது. எனவே கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு இன்று (30) முதல் சென்று தியானம் மேற்கொள்கிறார் மோடி.
7ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது. ஜூன் 1 காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும்.
ஜூன் 4ஆம் திகதி (செவ்வாய்க் கிழமை) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகளும் அதன் பின்னர் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அன்று மதியத்திற்குள் இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகள் யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்பது தெரியவந்துவிடும்.