ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது

இன்று (26) முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள இந்த அமைப்பு, நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை (27) மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது. 

இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.