வடக்கிலும் கிழக்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இரண்டு முக்கியமான கூட்டங்களில், வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பிலான யோசனைக்கு, ஏட்டிக்குப் போட்டியான வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விரு கூட்டங்களிலேயே, வடக்கு மற்றும் கிழக்கை மீளவும் இணைப்பது தொடர்பிலான யோசனைகள் முன்வைக்கப்பட்டு, இணைப்புக்குச் சாதகமான தீர்மானமும் எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன், ரி.வசந்தராஜா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, முக்கியமான மூன்று விடயங்கள், ஏகமனதான தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாரம்பரியமாக, தமிழ் பேசும் மக்களின் தாய் மொழி நிலைக்கவேண்டும், அவர்களின் கலாசாரம் மேம்படுத்தப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்களே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத் தொடரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தல். நிலைமாறு கால புனரமைப்பு செயற்;பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம், எதிர்கால தேசிய வேலைத்திட்டங்களில் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய அவசியம் போன்றவை ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன.
இதேவேளை, எக்காரணத்துக்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்கக்கூடாது என்ற பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரகடனம், இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும், முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும். மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் சமூகத்துக்கும் அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில், சம்மேளத்தின் செயலாளர் பொறியலாளர் எம்.எம்.எம்.நளீம், பொருளாளர் எம்.ஏ.ஜி.எம்.சபீர் உட்பட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூகப் பெரியார்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல பிரிவுசார் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.