இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் போராட்டம்!

நவம்பர் 26 ஆம் திகதி இந்தியாவின் பெரிய 10 தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் 250 மில்லியன் (25 கோடி) தொழிலாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தால் வங்கிகள், ரெயில்வே, துறைமுகம், தபால் தந்திச் சேவை, பாடசாலைகள், பஸ் போக்குவரத்து, அரசாங்க அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள், சுரங்கங்கள், எண்ணெய் துறை என எல்லாமே முடங்கிப் போயின.

இந்த வேலை நிறுத்தம் உலகின் மிகப்பெரிய போராட்டமாக கணிக்கப்படுவதாக ‘வேக்கேர்ஸ் வேல்ட்’ (Worker’s World) என்ற அமெரிக்க பத்திரிகை குறிப்பிடுகிறது.


அடிப்படைத் தேவைகளுக்கான போதிய ஊதியம், வறிய குடும்பங்களுக்கு இலவச உணவு விநியோகம், உத்தரவாதமான வேலை நாட்கள், அனைவருக்கும் ஓய்வூதியம், காலத்திற்கு முந்தி கட்டாய ஓய்வூதியத்துக்கு அனுப்புவதை நிறுத்தல் போன்ற பிரதான கோரிக்கைகளையும் வேறு சில கோரிக்கைகளையும் வலியுறுத்தியே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.


அத்துடன், கொவிட் நோய் பரவுவதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் இந்த வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளில் ஒன்றாக அமைந்திருந்தது.


இது இந்த வருடம் நடைபெற்ற இரண்டாவது பெரிய போராட்டமாகும். இதற்கு முன்னர் ஜனவரி 08 ஆம் திகதி இன்னொரு மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கம் நடத்தி முடித்திருந்தது.
மோடி அரசாங்கத்தின் பெரும் முதலாளித்துவ சார்பு பொருளாதாரக் கொள்கைகளின் தோல்வியையும், அவரது அரசாங்கம் மக்கள் மேல் திணித்து வரும் எதேச்சாதிகார அடக்குமுறைகளுக்கான எதிர்ப்பையுமே தொழிலாளர்களின் நவம்பர் 26 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தமும், தற்போதைய விவசாயிகள் கிளர்ச்சியும் எடுத்துக் காட்டுகின்றன.


அதே நேரத்தில் சமுதாய மாற்றத்துக்கான வர்க்கப் போராட்டத்துக்கான நிலைமைகள் முகிழ்ந்து வருவதையும், அந்தப் போராட்டத்துக்கான முன்நிபந்தனையாக தொழிலாளர்கள் – விவசாயிகளின் ஐக்கியத்தின் தேவையையும் இந்தப் போராட்டங்கள் தெளிவாக எடுத்துக் காட்டி நிற்கின்றன.