கடந்த, 2020ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, எல்லையில் இரு தரப்பிலும் இருந்து படைகள் குவிக்கப்பட்டன. பின், இந்தியா – சீனா இடையே நடந்த பல கட்ட பேச்சை அடுத்து, லடாக் எல்லையில் நிறுத்தியிருந்த ராணுவத்தில் ஒரு பகுதியை மட்டும் சீனா திரும்பப் பெற்றது. எஞ்சிய ராணுவத்தையும் திரும்பப் பெற பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை தன் நாட்டுடன் சேர்த்து சீனா வரைபடம் வெளியிட்டது; அந்த பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டியது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் டொனால்டு லுா கூறியதாவது: சீனா, அமெரிக்காவை சீண்டுவது போல, இந்தியாவையும் ஒவ்வொரு விஷயத்திலும் சீண்டி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. இதற்காக கடற்படை கூட்டுப் பயிற்சி, உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்றவற்றுடன் விண்வெளி, ‘சைபர்’ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும். இதற்கான பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீரில் அமைதி நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள பாதுகாப்பின்படி, காஷ்மீர் மக்களுக்கு கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது. அவர்களுக்கு இந்தியா அளித்த உறுதிமொழிகளை தொடர்ந்து நிறைவேற்றும் என நம்புகிறோம். காஷ்மீரில் அமைதி திரும்ப மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் அரசியல்வாதிகளுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, காஷ்மீரில் எல்லை தாண்டிய ஊடுருவல் குறைந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அங்கு பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக நடமாடுவதை காண முடியவில்லை. இது போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான சவால்கள் காஷ்மீரில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.