அத்துடன், பாஜக-வுக்கு எதிரான தங்களின் கூட்டணிக்கு ‘இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி’ (Indian National Developmental Inclusive Alliance) என்ற புதிய பெய ரையும் சூட்டியுள்ளனர். இந்த கூட்டணி, ஆங்கிலத்தில் ‘இந்தியா’ (I-N-D-I-A) என சுருக்கமாக அழைக்கப்படும் என கூறியிருக்கும் தலைவர்கள், ஆட்சியதிகாரத்திற்காக அல்லாமல், நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்கவே தாங்கள் ஒன்றிணைந்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
மோடி தலைமையிலான எதேச்சதி கார ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது காலத்தின் தேவை என்ற அடிப்படையில், கடந்த ஜூன் 23 அன்று பாட்னாவில் 17 கட்சிகள் ஒன்றாகக் கூடி ஆலோசித்தன. அதில், ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் உள்ள பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது என முடிவெடுத்த எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக ஜூலை 17, 18 தேதிகளில் மீண்டும் கூடி விரிவான ஆலோசனையை நடத்துவது என தீர்மானித்தன.
அதன்படி பெங்களூருவில் திங்களன்று மாலை துவங்கிய எதிர்க்கட்சி களின் 2-ஆவது கூட்டம் செவ்வாயன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,
காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,
தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலை வர் சரத் பவார்,
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,
இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா.
திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு எம்.பி.,
திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
ராஷ்ட்ரிய ஜனதாதளம் சார்பில் லாலு பிரசாத், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி,
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்,
ஐக்கிய ஜனதாதளம் சார்பில் அதன் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார்,
ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,
சிவசேனா (யுபிடி) சார்பில் அதன் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே,
சமாஜ்வாதி கட்சி சார்பில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ்,
தேசிய மாநாட்டு கட்சி சார்பில் அதன் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா,
மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அதன் தலை வரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி,
இந்திய தேசிய லோக்தள் கட்சியின் சார்பில் அதன் தலைவரும்,
ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா,
சிபிஐ(எம்எல்) லிபரேசன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா,
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஏயூடிஎப் கட்சியின் தலைவர் மவுலானா பக்ரு தீன் அஜ்மல்,
ராஷ்ட்ரிய லோக்தளம் சார்பில் அதன் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர, தமிழ்நாட்டிலிருந்து வைகோ (மதிமுக), தொல். திருமாவளவன் (விசிக), ஜவாஹிருல்லா (மமக), இ.ஆர். ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோரும், முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜய் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம், அப்னா தளம் (காமிராவாடி), புரட்சிகர சோச லிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக், கேரளா காங்கிரஸ் (எம்), கேரளா காங்கிரஸ் (ஜோசப்) உள்ளிட்ட கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்தின் முடிவில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது, பாஜகவுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி உதயமாகி இருப்பதாகவும், இந்தக் கூட்டணிக்கு, ‘இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
மேலும், “எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தில்லியில் செயலகம் அமைக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்பட 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட்டணியின் பெயருக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி என செயல்பட்டோம்.
தற்போது அதன் பெயர் ‘இந்தியா’ (I-N-D-I-A) என மாற்றப் பட்டுள்ளது. இந்த புதிய பெயர் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் அதாவது எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதே போல ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 11 பேரின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும். மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது, தொகுதி பங்கீட்டு உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்படும்” என்றும் அறிவித்தார்.