இலங்கையில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு இன்று (11) மாலை வருகைதரவிருக்கிறார். விசேட விமானத்தின் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மாலை 6 மணிக்கு வந்தடையும் அவரை, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வரவேற்பர். அத்துடன், விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளதுடன், படையணி மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்படும்.
அதன்பின்னர், கங்காராம விகாரையில் நடைபெறும் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். அன்றையதினம் இரவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திப்பார்.
மறுநாள் 12ஆம் திகதி, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் வெசாக் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், அன்றையதினம், ஹட்டனுக்கு செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையைத் திறந்துவைப்பார்.
அத்துடன், நோர்வூட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றுவார்.
அதனை முடித்துக்கொண்டு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர், புனித தந்த தாதுவைத் தரிசனம் செய்வதுடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களையும் சந்திப்பார்.
இதேவேளை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்படும் பகல்போசனத்திலும் பங்கேற்பார். பகல்போசனத்தை முடித்துகொண்டு, அங்கிருந்து நேரடியாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்வார். விமான நிலையத்தில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளார். அதன் பின்னர், நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.