மேலும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டு கோடி 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நட்டத்தை இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும், கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில், இன்று (08) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் உட்பட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலார்களின் அத்துமீறல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படடது.
மேலும், சுருக்கு வலை, உள்ளுர் இழுவைப் படகு, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், குழை போட்டு மீன் பிடித்தல் போன்ற சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும். கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
மேலும், புரெவிப் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நட்டஈட்டை பெற்றுத் தருமாறும் நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகளை விற்பனை செய்து, கிடைக்கின்ற பணத்தை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும், கோரிக்கை முன்வைத்தனர்.
இதையடுத்த கருத்துத் தெரிவித்த கடற்றொழல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் நடவடிக்ககளை நாடளாவிய ரீதியில் ஒழுங்குபடுத்தும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒழுங்கு விதிகளில், யாழ். மாவட்டத்தில் மூன்றரை இஞ்சி வலையைப் பயன்படுத்தி, 16 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்கு வலை தொழிலில் ஈடுபட அனுமதியளிப்பது தொடர்பாக பிரஸ்தாபித்தார்.
அதேபோன்று, இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு இன்னும் சில மாதங்களில் நிரந்தரமான தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனியார் கடலட்டை ஏற்றுமதியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் பிரதேச மக்கள் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் வகையிலான நிபந்தனைகளுடன் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
‘அதேபோன்று, 2017ஆம் ஆண்டில் இருந்து உள்ளுர் இழுவைப் படகு தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாரா நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம், உள்ளுர் இழுவை வலைப் படகு தற்காலிகமாக தொழிலில் ஈடுபட முடியும்.
‘அத்துடன், மீறுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறுக்கமாக்கப்பட்டுள்ளது’ என்றும், அவர் தெரிவித்தார்.
மேலும், கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் சங்கங்களின் பூரணமான ஒத்துழைப்புக் கிடைக்குமாயின் வெளிச்சம் பாய்ச்சுதல் மற்றும் குழை போட்டு கணவாய் பிடித்தல் போன்ற சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பண்ணை முறையில் கடலட்டை, மீன், நண்டு மற்றும் இறால் வளர்ப்பில் ஈடுபடுவதற்கு தீவகத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்கள் விரும்புமாயின், ஒவ்வொரு சங்கத்துக்கும் தலா பத்து ஏக்கர்களை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துடன், ஆழ்கடல் பலநாள் மீன்பிடித் தொழில் தொடர்பான பயிற்சிகளை பெற்றுக் கொள்ள விரும்பகின்றவர்கள் தொடர்பான விவரங்களைத் தருமாறும் கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.