இந்திய மீனவர்கள் ரோலர் இயந்திரங்களை பயன்படுத்தி பலவந்தமாக வடக்கு கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுப்பது தொடர்பில் இந்தியாவுக்கு சமூகமளிக்குமாறு அந்நாட்டு மீனவர் சங்கம் பிரதிநிதிகள் விடுத்திருந்த கோரிக்கையை வடக்கு கடற்றொழில் சங்கங்கள் நிராகரித்துள்ளன. இந்த கோரிக்கையை நிராகரித்தமைகான காரணம் என்ன என்பது தொடர்பில் வடக்கு கடற்றொழில் சங்கத்தின் ஆலோசகர் விநாயகமூர்த்தி சகாதேவனிடம் கேட்டபோது, மீனவர் விவகாரம் தொடர்பில் இலங்கை பிரதமரும் இந்திய பிரதமரும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு சாதாரண மீனவர்கள் பேச்சுநடத்தி தீர்வு காண முடியும் என்று நம்பவில்லை என்பதனால் அந்த அழைப்பை நிராகரித்தோம். இந்திய மீனவ சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள் இந்த கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.