வாகன இறக்குமதியை கட்டுப்படுத்தி, அதனூடாக இலங்கை ரூபாயின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையாமல் பேணுவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2017 – 18 காலப்பகுதியில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் பெறுமதி 36 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இது 3 – 4 வருடங்களுக்கு முன்னதாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு சமர்க்கப்படும் பாதீட்டில் வரி குறைப்பு, சலுகைகள் போன்றன உள்ளடங்கப்படாது என தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன வரிச் சலுகைகளை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமை தம்மை பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மாருதி, வெகன் ஆர் போன்ற வாகனங்களில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் அறிவிக்கப்பட்ட வரி விதிப்பு காரணமாக, சுசுகி வெகன் ஆர் ஒன்றின் விலை 425,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நடப்பாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 1000 ccக்கு குறைந்த என்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி காரணமாக, 195 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரிப்பு எனவும், இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
1,500 cc திறன் படைத்த கார்களின் இறக்குமதியும் நடப்பாண்டில் 73 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி 20 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
Sports Utility Vehicles (SUV) வாகனங்களின் பெறுமதியும் நடப்பாண்டில் பெருமளவு அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டில், இந்தப் பெறுமதி 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், நடப்பாண்டில் 8.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இறக்கம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் பெறுமதி 300,000 ரூபாயால் அதிகரித்துள்ளதென, வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே தெரிவித்தார்.