இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர்அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமியில் சிக்கி சுமார் 384இற்கும் அதிகமானோர்உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக இந்தோனேசியா உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவிலுள்ள பாலு என்ற பகுதியில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி அலைகள் அங்கிருந்தவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளன.
கடந்த மாதம் இந்தோனேசியாவின் மற்றொரு தீவான லோம்போக்கில் தொடர்ச்சியாகப் பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. குறிப்பாக, ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மட்டும் அதிகபட்சமாக 460இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
“தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சேத விவரங்கள் சரிவர கிடைக்கவில்லை. சுனாமி பேரலைகளால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட பலரது உடல்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதால், உயிரிழந்தோர் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிட இயலவில்லை” என இந்தோனேசிய பேரிடர் மீட்புப் படையின் செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுகரோஹோ தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான உயிரிழப்புகள் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ளதா அல்லது சுனாமியால் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
சுனாமி பெரியளவில் தாக்கிய பாலு என்ற பகுதியில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தகவல் தொடர்பும், உள்ளூர் விமான நிலையத்தின் ஓடுபாதையும் பாதிக்கப்பட்டிருந்தாலும், மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் இந்தோனேசிய அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு பூமிக்குக் கீழே 10 கிலோ மீற்றர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு கூறியுள்ளது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை ஒரு மணிநேரத்தில் திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சுலாவெசி தீவின் மத்திய பகுதியிலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பாலு என்ற பகுதியில் எழுந்த சுனாமி அலைகள் அங்குள்ள மசூதி உட்படப் பல கட்டடங்கள் சூழ்வதைக் காணொளிகள் மூலம் காணக்கூடிதாக இருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.
2004 டிசம்பர் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா கடற்பரப்பில் நிகழ்ந்த மிகப் பெரிய நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட மிக மோசமான சுனாமியால் இந்தியப் பெருங்கடலில் 2.26 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 1.2 லட்சம் பேருக்கு மேல் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.