மலர்வண்ணன் படகின் ஓட்டுநர். ரெஜின் பாஸ்கர், சேசு, ஆஸ்டின் சுஜிந்தர் மூவரும் சக கடலோடிகள். பாலிடெக்னிக் படிக்கும் மாணவனான ஆஸ்டின் சுஜிந்தர், வேம்பாரிலிருந்து தற்செயலாக பாம்பன் வந்தவன். ஆனந்த் என்பவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, தாத்தா மலர்வண்ணனோடு தொழிலுக்குப் போயிருக்கிறான். இறந்த மூவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அடித்தட்டு மக்கள்.
கதறலைக் கண்டுகொள்ளாத அரசு
‘என்னோடு கடலில் குதித்தவர்கள் உயிரோடு இருக்கலாம் விரைந்து தேடுங்கள்’ என்று காப்பாற்றப்பட்டுக் கரைக்கு வந்த சேசு திரும்பத் திரும்பக் கதறியிருக்கிறார். வழக்கம்போலவே அரசுத் தரப்பின் செவிகளில் அந்த அபயக் குரல் ஏறவேயில்லை. கடலில் காணாமல் போனவர்களின் மூன்று குடும்பங்களும் ராமேஸ்வரம் மீன்வளத் துறை அதிகாரிகளையும், வட்டாட்சியரையும் சந்தித்து முறையிட்டார்கள். பலன் ஏதும் இல்லாமல் போக, ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்னால் மறியல் நடந்தது. கடலோரக் காவல்படைக்குச் சொல்லி தேடச் சொல்லுகிறோம் என்று மக்களைப் போராட்டத்தைக் கைவிடச் சொன்னார்கள் அதிகாரிகள். மல்லிப்பட்டினம் பகுதியில் தேடுவதற்கான படகு ஏற்பாடு செய்திருக்கிறோம், அங்கு போங்கள் என்று போராடிய மக்களைத் திசை திருப்பிவிட்டார்கள். அங்கும் முற்றுகையிட வந்த மக்களைக் கோடிக்கரை பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கிவிட்டதாகத் தவறான தகவலைச் சொல்லி, திருப்பியனுப்பியிருக்கிறார்கள்.
புதுக்குடி நாட்டுப் படகு மீனவரொருவர், தங்கள் கடல் பகுதியில் சடலம் ஒன்று மிதக்கிறது என்று கடலோரக் காவல்படைக்கு அனுப்பிய செய்தி தெரியவந்ததும் போராட்டம் கைவிடப்பட்டது. திரண்டிருந்த மக்கள் எல்லோரும் மல்லிப்பட்டினம் போக முடிவெடுத்து அங்கு ஓடுகிறார்கள். அவர்களுடைய பதற்றமெல்லாம், கடலில் தவிக்கும் ஒரு உயிரையாவது காப்பாற்றிவிடலாமே என்பதால்தான். ஆனால், எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழநிக்கு இறுதி மரியாதை நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டதைக் காரணமாக்கி, கடலுக்குள் சென்ற மீனவர்களின் பிரச்சினையைக் கண்டுகொள்ள மறுத்தது மாவட்ட நிர்வாகம்.
கொள்ளுக்காடு சொல்லும் பாடம்
பரிதவிக்கும் உறவுகளுக்கு உதவ ராமேஸ்வரம் விசைப்படகு சங்கங்களும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாத நிலையில், துடிப்பான இளைஞர்களால் செய்தி தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு மீனவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளுக்காடு அந்தோணியார்புரம் ஊர்த் தலைவர் செங்கோல் தலைமையில் ஊர்க் கூட்டம் நடக்கிறது. ஒட்டுமொத்த கொள்ளுக்காடு மக்களும் மீன்பிடிக்கச் செல்லாமல் தேடுதலுக்குக் கிளம்புகிறார்கள். 7 படகுகளில் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பான தேடல். பதறித் துடித்துவந்த, கடலில் காணாமல் போனவர்களின் குடும்பங்களை ஊரில் தங்கவைத்து உபசரிக்கிறார்கள்.
தேட ஆரம்பித்த முதல் நாளான 19-ம் தேதியே ரெஜின் பாஸ்கரின் சடலத்தைக் கரையிலிருந்து 22 கடல் மைல்கள் தூரத்தில் கண்டெடுக்கிறார்கள். கரைகொண்டு வரப்பட்ட சடலத்தை அடையாளம் காட்டுவதற்கு உடன் பிறந்த சகோதரனே அங்கு களத்தில் இருந்தபோதும், அதை மறுத்து இறந்தவரின் மனைவி, குழந்தைகள் உடனே அங்கு வர வேண்டுமென அடம்பிடிக்கிறார்கள் அதிகாரிகள். இது கரோனா காலம், போக்குவரத்தில் பிரச்சினை இருக்கிறது என்று மக்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதிகார வர்க்கம் அசைந்துகொடுக்கவில்லை. இது என்ன வகையான மனநிலை, அதிகார ஆணவம் என்று புரியவில்லை.
20-ம் தேதி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பிரபாகர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொள்ளுக்காடு மீனவர்களின் 6 படகுகள் தேடுதலுக்குக் கிளம்பி கரையிலிருந்து 24 கடல் மைல்கள் தூரத்தில், சிறுவன் ஆஸ்டின் சுஜிந்தர் உடலைக் கண்டெடுக்கிறார்கள். கொள்ளுக்காடு ஊரிலிருந்து சடலம் கிட்டத்தட்ட முன்னூறு கிமீ தூரத்தில் உள்ள வேம்பாருக்குப் பயணிக்க வேண்டும். ஒரு அமரர் ஊர்தியை ஏற்பாடு செய்துகொடுப்பதில்கூட 3 மணி நேரத் தாமதம்.
21-ம் தேதி கீழத் தோட்டம் நாட்டுப்படகு மீனவர்கள் தந்த தகவலின் அடிப்படையில், 14 கடல் மைல்கள் தூரத்தில் மலர்வண்ணனது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆக, கடலில் இறந்த எந்த ஒரு மீனவரது சடலத்தைக் கரை கொண்டுவருவதிலும் அரசின் பங்கு ஏதுமில்லை. ஆனால், அலட்சியமும் அலைக்கழிப்பும் வீண் வதந்திகளைப் பரப்பித் திசைதிருப்புவதும் உதவுவதாகக் கூறிக்கொண்டு, தேடுதலைத் தாமதப்படுத்துவதும் அரச அதிகார மிரட்டல்களும் நடந்தேறியிருக்கின்றன.
நிவாரணமேனும் உடனே கிடைக்கட்டும்
இறந்தவர்கள் மூவரின் குடும்பங்களும் சவப்பெட்டி வாங்கக்கூட வசதியில்லாதவை. பரிதாபத்தின் உச்சத்திலும் உடற்கூறு ஆய்வுக்கான கையூட்டு பெறுவதில் அரசுத் தரப்பு காட்டிய ஆர்வம்… சடலத்தை வைத்துக்கொண்டு சவப்பெட்டி ஏற்பாடு செய்ய மீன்வளத் துறையிடம் நிதியில்லை என்று பேசிய ஆணவம்… இவர்களை என்ன செய்வது! கடலில் நடந்த விபத்து என்று சொல்லி காப்பாற்றுவதிலோ, சடலங்களைக் கரைக்குக் கொண்டுவருவதிலோ அக்கறை காட்டாத அரசு, இறந்தவர்களுக்கான நிவாரணத்தையேனும் விரைந்து அளிக்க வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் மீனவர்களின் எதிர்கால நம்பிக்கைக்கான ஒரு ஒளிக்கீற்று பளிச்சிடுகிறது. சாதி, மதம் கடந்து சக தொழிலாளிக்கு ஏற்பட்ட விபத்து என ஊர் திரண்டுவந்து, மூன்று உடல்களையும் கரைசேர்த்து, இறந்தவர்களின் சோகத்திலும் துணைநின்ற கொள்ளுக்காடு மீனவர்களின் அக்கறையான செயல்பாடுதான் அது. முரண்பாடுகளைக் கடந்து, தமிழக அளவில் மீனவர் ஒற்றுமைக்கான பாதைக்கு வித்திடும் அந்த ஒற்றுமையில் கடலோரம் விழித்துக்கொள்ளும் என்றும் நம்புகிறேன்.
– ஜோ டி குரூஸ், ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.