இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது என்றொரு சுற்றுநிருபத்தை வடமாகாண கல்வியமைச்சு அறிவிக்கப் போவதாக கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் சொல்லியிருக்கிறார். எந்தக் கலை வடிவத்தை எங்கு, யார் நிகழ்த்த விரும்புகிறார்களோ அவர்கள் அங்கு அப்படி நிகழ்த்துவதை தடை செய்யவோ, கட்டுப்படுத்தவோ அமைச்சுகளுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரமில்லை. ஆடும் கலைஞர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் பறை வாசித்து மேடையேற்றி விட்டு, எங்கு எதை வாசிப்பதென்று பேசிப்பார்க்கலாம். நாட்டியம் எதிர் பறையென்று யோசிக்க விருப்பமில்லைத் தான். ஆனால் முடியுமா? பறையெடுத்து பள்ளிக்கூட மேடையில் ஆடி அதற்கு பரதத்தையும் இணைத்தும் ஆட விரும்பினால் என்ன சொல்வார்கள் இவர்கள். கலைக்குள் சமத்துவத்தப் பேணும் கல்வியைக் கொடுக்க முடியுமா உங்களால்?, கொடுத்துப் பாருங்கள் ஒரு சுற்றுநிருபம்.
இராணுவத்திற்கு முன்னால் ஆடுகிறார்களாம், நல்லது, யாரையும் வணங்கி, தொழும் மனோபாவம் கலைக்கு எதிரானது. அப்போது தமிழ் அமைச்சர்களின் முன்னும் அதிகாரிகளின் முன்னும் ஆடினால் சரியா?.
அது மன்னர் காலம். இது மக்கள் காலம். இதில் கண்டிய நடனத்தை அவர்கள் தெருவில் ஆடட்டும் என்பதில் அமைச்சர் என்ன சொல்ல வருகிறார். கலைக்கு ஏதைய்யா இனம், மதம், மொழி, சாதி. யார் கட்டினாலும் சலங்கை ஒலிக்கும், யார் அடித்தாலும் பறை அதிரும்.
கலைக்குரிய சுதந்திரத்தைப் பெற்றுத் தருவது தான் உங்கள் வேலையாக இருக்க முடியுமே தவிர. அதைக் கட்டுப்படுத்துவதல்ல.
(Kirisanth Sivasubramaniyam)