சுற்றுலாத்துறையின் தேவையின் பொருட்டே பாஸ்மதி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2025இல் ஏனைய அனைத்து பயிர்செய்கைகளிலும் 80 வீதமான தன்னிறைவடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட, விவசாயத்துறை கடந்த ஒரு வருட காலத்திற்குள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற சந்தர்ப்பத்தில் விவசாயத்துறை பாரிய அழிவை சந்தித்திருந்தது. எனினும் அப்போது ஜனாதிபதி, இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் முழுமையான ஒத்துழைப்புடன் கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர். அதன்படி கடந்த போகத்தில் 2 இலட்சத்து 12,000 ஹெக்டயர் வயலில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து பன்மடங்கு அறுவடை கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே எமக்கு தேவையான அரிசி எமது நாட்டிலேயே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு பாரியளவு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டதால் அதற்காக பல மில்லியன் டொலர் பணத்தையும் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். எனினும் இனி அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படாது. இனி பாஸ்மதி தவிர்ந்த வேஞ எந்த அரிசியையும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதைத் தவிர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனூடாக விவசாயிகளால் வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். இது தொடர்பில் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று விவசாயிகளை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
அத்தோடு இனிவரும் காலங்களில் உள்நாட்டு தேவைக்காக மாத்திரமன்றி , வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு விவசாயத்தை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான இலக்குகளை அடைவதற்காக விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்களுக்காக 750 மில்லியன் ரூபாவினை வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை ஏற்படுமிடத்து , நிதி அமைச்சிடமிருந்து வேண்டியளவு நிதியைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய விரைவில் எம்மால் இந்த இலக்குகளை அடைய முடியும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.