பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவத்தைக் கண்டித்து, வட மாகாணம் முழுவதும், நாளை செவ்வாய்க்கிழமை (25), ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஏழு கட்சிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த ஹர்த்தால் அழைப்புக்கு, யாழ். மாவட்ட வர்த்தகர் சங்கமும் ஆதரவு வெளியிட்டு, அக்கட்சிகளுடன் இணைந்துள்ளது.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால், ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம், மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான அமைப்பும் சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்தே, இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளன.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழங்களிலும், இன்றைய தினம், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அனைத்துப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.