குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவ நகரில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டதில் ஹோட்டல் முற்றாக சேதமடைந்த நிலையில் பெரும்பான்மையின சமூகத்தினர் சுமார் 200 பேர் இணைந்து குறித்த ஹோட்டலை 12 மணி நேரத்திற்குள் மீள் நிர்மாணம் செய்து பாதிக்கப்பட் தரப்பினரிடம் ஒப்படைத்த சம்பவம் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான குறித்த ஹோட்டலில் 18 மணி நேரமாக எதுவித வியாபார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் அங்குள்ள பெரும்பான்மையின உள்ளூர் வர்த்தக சங்கத்தினர் 200 பேர் இணைந்து இந்த மீள்நிர்மாணத்தை முன்னெடுத்தனர்.
கடந்த சில தினங்களாக நாட்டில் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவம் கிளர்ச்சியை தூண்டுபவர்களுக்கு இது முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஆனமடுவை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் மற்றும் வீடொன்றின் மீது இரு வேறு பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் ஆனமடுவை நகரில் அமைந்துள்ள முஸ் லிம் ஹோட்டல் மீதும், அளுத்கம – தர்கா நகர், அதிகாரிகொடவில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றின் மீதுமே இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்களின் போது எவருக்கும் ஆபத்துக்கள் நேராத போதும் ஹோட்டலும், வீடும் தீக்கிரையாகி கடும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவை சம்பவம்:
நேற்று அதிகாலை 2.00 மணியளவில் ரஸ்நாயக்க புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஒட்டுகுளம் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான முஸ் லிம் ஹோட்டல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்படும் போது ஹோட்டல் மூடிய நிலையிலேயே இருந்துள்ளதுடன் நகரில் வழமையான பொலிஸ் பாதுகாப்பும் இருந்துள்ளது.
குறிப்பாக தாக்குதல் இடம்பெறும் போது அப்பகுதியில் பாதுகாப்புக்கு போடப் பட்டிருந்த பொலிஸார் இருவரும் இருக்கவில்லை என தெரியவந்துள்ள நிலையில், மிகத்திட்டமிட்டு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
(Thesamnet)