வெற்றி எண்ணிக்கை: இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒவ்வொரு தொகுதியிலும் யார் யார் வெற்றி பெற்றனர் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு முடித்திருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது. 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆளும் வாய்ப்பை பாஜக இழந்துள்ளது. மீதமுள்ள 3 தொகுதிகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
குஜராத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டாம் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக குஜராத்தில் களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். 3 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். கட்சிகளின் மக்கள் செல்வாக்கு என்பது ஒரு கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறது என்பதில் மட்டும் இல்லை. அது எவ்வளவு சதவீத வாக்குகளை பெறுகிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. அந்த வகையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்து தற்போது பார்ப்போம்.
இமாச்சலப் பிரதேசம்: ஆளும் கட்சியான பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் பெற்ற வாக்கு 43.90 சதவீதம். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் காங்கிரசிடம் தோல்வி அடைந்த பாஜக பெற்ற வாக்கு 43 சதவீதம். இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் 0.90 சதவீதம் மட்டுமே. இவ்விரு கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-ம் இடத்தைப் பிடித்துள்ள கட்சி ஆம் ஆத்மி. இந்தக் கட்சி 1.10 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி 0.66 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 0.35 சதவீதத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.01 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இமாச்சலப் பிரதேசம் – வாக்கு சதவீதம்:
காங்கிரஸ் - 43.90%
பாஜக - 43%
ஆம் ஆத்மி - 1.10%
மார்க்சிஸ்ட் - 0.66%
பகுஜன் சமாஜ் - 0.35%
இந்திய கம்யூ. - 0.01%
குஜராத்: பிரம்மாண்ட வெற்றியுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள பாஜக பெற்ற வாக்கு 52.50 சதவீதம். இரண்டாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் பெற்றது 27.28 சதவீதம். மூன்றாம் இடம்பிடித்துள்ள ஆம் ஆத்மி 12.92 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 0.50 சதவீத வாக்குகளையும், சிபிஎம் 0.03 சதவீத வாக்குகளையும், சிபிஐ 0.01 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. குஜராத் – வாக்கு சதவீதம்:
பாஜக - 52.50%
காங்கிரஸ் - 27.28%
ஆம் ஆத்மி 12.92%
குஜன் சமாஜ் கட்சி 0.50%
சிபிஎம் 0.03%
சிபிஐ 0.01%