ஊர்காவற்துறை பரித்தியடைப்பை சேர்ந்த அமரர் ராஜேந்திரம் இராஜசேகரம் அவர்களின் மறைவையொட்டித்தான் அவர்கூட அமைப்பில் இருந்த சக தோழனின் மனக்குரலாகத்தான் அது இருக்கிறது.
அந்த மனக்குரலின் மனசில் இன்றும் அரசியல்தான் இருக்கிறது. அந்த அரசியலின் அகவயமான சூட்சுமமும் அம்மனக்குரலில் இருப்பதை அந்தக் கண்ணீர் நிறைந்த முகநூல் பதிவிலும் இருந்தது.
இராஜேந்திரம் நெய்தல் மண்ணின் சாராசரி குடும்பத் தலைவன். இராஜேந்திரத்திற்கு மொத்தம் எட்டுக்குழந்தைகள். அதில் ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆகும்.
80 களில் ஈழத்தமிழ் அரசியல் ஆயுதப் போராட்டமாக மேலெழுந்த பொழுது மூன்று மகன்களும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) அமைப்பில் இணைந்துள்ளார்கள்.
பின்னாளில் அந்த மூவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) இன் முக்கியஸ்தர்கள்; அவ்வமைப்பு சார்பில் 90 களில் தீவக பொறுப்புக்கூறும் தலைமைகளாக இருந்திருக்கிறார்கள்.
90 களில் கோட்டை இராணுவ முகாமில் உள்ள இராணுவ வீரர்களை மீட்க, ஊர்காவற்துறையில் இறங்கிய இராணுவத்தினர்களுக்கு அஞ்சிய மக்களோடு இராஜேந்திரம் குடும்பமும் இடம்பெயர்ந்தது.
இராஜேந்திரம் குடும்பம் வன்னிக்கு அந்த இடம்பெயர்வில் குடியேறியது. அச்சூழலில் ஒரு மகனும் LTTE அமைப்புக்குச் சென்றிருந்தார். அவரும் சமரில் சாவடைந்திருந்தார்.
பூநகரி மீதான இராணுவ தாக்குதலில் இராணுவச் சூழலுக்குள் கொண்டுவரப்பட்ட இராஜேந்திரம் குடும்பம் திரும்பவும் ஊர்காவற்துறை கரம்பனுக்கு வந்திருந்தது.
அச்சூழலில் இராஜேந்திரம் இராஜசேகரம் (சத்துரு), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) இல் இணைகிறார்.
போதாக்குறை மாறாது தொடரும் அக முரண்பாடென்பது EPDP க்குள்ளும் எழுந்து நின்றது. அதொரு இருண்ட பக்கங்களாகின.
இராஜேந்திரத்தின் இன்னொரு மகன், இடதுசாரியக் கட்சி உறுப்பினராக இருக்கிறார்.
‘ஆடு நனைகிறதென ஒநாய் அழுதது’ என்கிற முதுமைமொழியை சுட்டி நிற்கும் மன நிலைக்கு கொண்டு வரும் அரசியல் புரட்சி சாயம் பூசிய பசப்பு வார்த்தைகளையே கண்ணீர் அஞ்சலிக்காக விதைக்கப்படுகின்றன.
ஆயிரமாயிரம் குடும்பங்களின் அவல நிலை! யாழ்மையவாத மேட்டுக்குடி வர்க்க குணாம்ச தலைமைகளின் அதிகாரப்பசிக்கு காவு கொடுக்கப்பட்ட சாமானிய தமிழ்க்குடும்பங்களின் கண்ணீர்த்துளிகள்!
பார்க்க மறுத்து நிற்கும் பக்கங்களின் உளவியலைப் புரிந்து கொள்ளாதவரைக்கும் ‘தற்கொலை’களை தடுத்திட முடியாது!
மனதார ஈரம் கசிய தலைகுனிந்து உன் காலடியில் என் கண்ணீர்த்துளிகள்!