ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ள விதம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தேசிய பட்டியல் எம். பிகள் நியமன விவகாரம் ஏற்கனவே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. தேர்தல் கேட்டு தோற்றுப் போன வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் எம். பிகளாக நியமிக்கப்பட்டு இருக்கின்றமையை ஆட்சேபித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிப் பிரமுகர்கள் பலரும் வழக்குத் தாக்கல் செய்து உள்ளனர்.
ஆனால் தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனத்தில் நீதியாக நடந்து கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சி மார்தட்டி உள்ளது. இருப்பினும் கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்திலேயே போட்டியிட்டு இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே மு. கா தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேசி இணக்கம் கண்டமைக்கு அமைய இரு தேசியப் பட்டியல் ஆசனங்களை மு. காவுக்கு கொடுக்க ஐ. தே. க முன்வந்தது.
ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் நாயகத்துக்கு மு. கா தலைவர் அறிவுறுத்திய பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸுக்கான தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீட்டில் முன்னிலை வேட்பாளர்களாக மு. கா. செயலாளர் நாயகமும், முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டனர். இவர்களில் ஹசன் அலி மு. காவின் முதனிலை தேசியப் பட்டியல் வேட்பாளர் ஆவார்.
ஆனால் தேர்தல் முடிவை தொடர்ந்து சொந்த சகோதரரையும், குடும்ப நண்பரையும் தேசியப் பட்டியல் எம். பியாக நியமிக்க பெயர்கள் குறிப்பிட்டு ஐக்கிய தேசிய கட்சி செயலாளர் நாயகத்துக்கு ரவூப் ஹக்கீம் அனுப்பி வைத்தார்.
இது ஐ. தே. க தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உதவித் தலைவர் ரவி கருணநாயக்க ஆகியோரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் ஏதேனும் தவறு நேர்ந்து இருக்கலாம் என்று நினைத்து ரவூப் ஹக்கீமின் இணைப்பாளருடன் தொடர்பு கொண்டு மீள உறுதிப்படுத்திக் கொண்டனர்.
இந்நிலையிலேயே இத்தேசியப் பட்டியல் எம். பிகள் நியமனம் இயற்கை நீதிக்கு முரணானது என்று ரவூப் ஹக்கீமுக்கு பூடகமாக ஐக்கிய தேசிய கட்சிப் பிரமுகர்களால் உணர்த்தப்பட்டு உள்ளது என்று இச்செய்திகள் கூறுகின்றன.
இயற்கை நீதிக்கு முரணான இச்செயற்பாட்டால் மு. கா ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து உள்ள நிலையில் வரும் தினங்களில் தலைவர் ஹக்கீமின் அறிவுறுத்தலுக்கு அமைய இரு எம். பிகளும் இராஜினாமா செய்வார்கள் என்று தெரிய வருகின்றது.
தவறை திருத்த கிடைத்து உள்ள சந்தர்ப்பத்தை தலைவர் மிக சரியாகவும், நீதியாகவும் பயன்படுத்துவார் என்று மு. கா ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.