ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் போது, கடந்தாண்டு ஜூலையில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கச் சில நாட்கள் இருப்பதற்கு முன்னர், தனது அடுத்த ஊடகச் சந்திப்பை, நேற்று நடத்தினார்.
அந்தச் சந்திப்புக்கு முன்னதாகவே, அவரைப் பற்றியதான, ஆனால் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத, புலனாய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. எனவே, வழக்கத்தை விட, அதிக அனல்பறக்கும் ஊடகச்சந்திப்பாக இது அமைந்தது.
முன்னதாக, அந்த ஊடக வெளியீடு தொடர்பான செய்தி வெளியிடப்பட்டதும், “போலியான செய்தி. அரசியல் பழிவாங்கல்” என்று மாத்திரம் டுவிட்டரில் தெரிவித்த ட்ரம்ப், சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர், மீண்டும் பொரிந்து தள்ளினார். அந்த அறிக்கை போலியானது எனவும் ரஷ்யா தன்னை மிரட்டவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், “போலியான இந்தச் செய்தி, பொதுமக்களிடம் கசிவதற்கு, புலனாய்வு முகவராண்மைகள் அனுமதித்திருக்கக்கூடாது. என்னை நோக்கிய இறுதி அடி. நாஸி ஜேர்மனியிலா நாங்கள் வாழ்கிறோம்?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கொண்ட அறிக்கையொன்று, பகிரங்கப்படுத்தப்பட்டமை, மிகவும் கேவலமானது என்று குறிப்பிட்டார். குறித்த அறிக்கை தொடர்பில், புலனாய்வு முகவராண்மைகளால், ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் அடுத்த ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறிக்கையைத் தான் வாசித்ததாகவும், “அனைத்தும் பொய்யான செய்தி. போலித்தனமான விடயங்கள். அவை நடக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். இந்த அறிக்கையை, புலனாய்வு முகவராண்மைகள் கசிய விட்டிருந்தால், அவைகளின் வரலாற்றில் அது மோசமானதாக அமையுமென அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, அந்த அறிக்கையை செய்தி இணையத்தளமொன்றும் (பஸ்ஃபீட்) தொலைக்காட்சி நிறுவனமொன்றுமே (சி.என்.என்) பிரதானமாக வெளியிட்டிருந்த நிலையில், அவைகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவற்றை விமர்சித்தார். பின்னர் ஒரு கட்டத்தில், சி.என்.என் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி கேட்பதற்கு முயன்றபோது, அதை ட்ரம்ப் அனுமதிக்கவில்லை. “நீங்கள் போலிச் செய்தியாளர்கள்” என்று தெரிவித்தார்.
எனினும், ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்கள் ஹக் செய்யப்பட்ட விடயத்தில், ரஷ்யாவே அனேகமாக ஈடுபட்டது என்பதை, முதன்முறையாக ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். இதுவரை காலமும், “ரஷ்யா, சீனா, தனது படுக்கையிலுள்ள 400 பவுண்ட் நிறையுள்ள யாரோ ஒரு நபர்” என யாரும் ஹக் பண்ணியிருக்கலாம் என்றே, ட்ரம்ப் தெரிவித்து வந்தார்.
ஆனால் இந்த ஊடகச்சந்திப்பில் அவர், ரஷ்யா அதை மேற்கொண்டது என ஏற்றுக் கொண்டார். அத்தோடு, ஹக்கிங்களை மேற்கொள்வதற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டிருக்கக்கூடாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார். “அவர் அதைச் செய்திருக்கக்கூடாது. தற்போது அவர் அதைச் செய்வார் என நம்பவில்லை. எங்கள் நாட்டை, ஏனையோர் வழிநடத்தியபோது இருந்ததைவிட, நான் வழிநடத்தும் போது, எங்கள் நாடு மீது, ரஷ்யாவுக்கு அதிகளவு மரியாதை காணப்படும்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
ஏராளமான வணிக நிறுவனங்களைக் கொண்டு நடத்தும் ட்ரம்ப், ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கும் போது, நலன் முரண் ஏற்படுமென்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. வழக்கமாக, ஜனாதிபதியாகத் தெரிவாகுபவர்கள், தங்களுடைய நிறுவனங்களை, வேறு எவரிடமோ பொறுப்புக் கொடுப்பர். இது தொடர்பான முடிவையும், ட்ரம்ப் இதன்போது அறிவிப்பார். ஆனால் அவர், தனது நிறுவனங்களை, தனது இரண்டு மகன்களிடமும் பொறுப்பு வழங்கப் போவதாகவே அறிவித்தார். இதன்மூலம், நல முரணைத் தடுக்க முடியாது என, விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.