மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான 6ஆவது சுற்றுபேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அமித் ஷாவுடன் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நடத்திய இந்தச் சந்திப்பு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள் 8 பேர் மற்றும் பல்வேறு தேசிய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 13 பேர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகம், தொழில் துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முதலில் இந்த சந்திப்பு அமித் ஷாவின் இல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பூசா பகுதியில் நடைபெற்றது. அனைத்திந்திய இந்திய கிஸான் சபை பொதுச் செயலாளர் ஹன்னான் முல்லா, பாரதிய கிஸான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய கிஸான் சபை பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான ஹன்னான் முல்லா கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார்.
எனினும், அச்சட்டங்களில் மேற்கொள்ள இருக்கும் திருத்தங்களை (இன்று)புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் எழுத்துமூலம் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.