இரும்பு பெண்மணி’ இந்திரா காந்தி நினைவுதினம் இன்று…

நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , ‘இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார்.
அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.


தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர். அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம். ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது.

அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.
அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார். இதைப்பற்றிக் கூறும் போது அவர், “ தந்தையின் முயற்சியால் ஏற்கனவே எனக்கு இலக்கியத் தொடர்பு இருப்பினும், சாந்தி நிகேதனுக்குச் சென்றவுடன் தாகூர் மூலமாக கலையுலகின் கதவு தானாகத் திறந்தது” என்றார்.
தன்னுடைய 11வது வயதில் இராமாயணக் காப்பியத்தில் வருவது போன்று, வானரப் படையை நிறுவ முயன்றார். தன் வயதொத்த சிறுவர் சிறுமியரை இணைத்து, வானரசேனை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து வைத்தார். வானரசேனை என்ற இந்த அமைப்பு பல அரும் பணிகளைச் செய்தன. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரார்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, கொடிகள் தைத்துக் கொடுப்பது, கல்வியறிவற்றவர்களுக்கு தேவையான மடல்கள் எழுதிக் கொடுப்பது, விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களுக்கு மடல் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்தல், சமையல் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்றப் பணிகள் செய்து வந்தனர்.

இவையனைத்தும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின் தாக்கம்தான் என்பதை அவரே, 1930 இல் பூனாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது, ” காந்தியடிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்தார். என் ஒவ்வொரு செயல்களிலும் முன்னேற்றங்களிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு” என்ற சொற்கள் மூலம் அதை உறுதிபடுத்தினார். ”பாலசர்க்கா சங்கம்” என்ற நிறுவனத்தை , காந்தியடிகளின் அறிவுரைப்படி நிறுவி, சிறுவர், சிறுமியுடன், நூற்பு வேள்வியை மேற்கொண்டார். ஆனந்த பவனம் என்ற தம்முடைய மாளிகையின் மூத்த பணியாளர் ஒருவருக்கு தம் இளம் வயதிலேயே கல்வி கற்பிக்கும் பணியும் மேற்கொண்டார். தம் இல்லத்திற்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு தொழுநோய் இல்லத்திற்கு அடிக்கடி சென்று தன்னால் ஆன சேவைகளைச் செய்ய முற்பட்டிருக்கிறார்…