(மேனகா மூக்காண்டி)
சர்வதேச ரீதியில் பாரியதொரு சவாலுக்கு இலங்கை அரசாங்கம் முகங்கொடுத்துவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் – ஜெனீவா நகரில் இன்று திங்கட்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது இலங்கை பாதுகாப்புப் படையினராலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, இம்முறை பேரவை கூட்டத்தொடரின் போது முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த அமர்வு, இலங்கைக்கு பாரியதொரு சவாலாக மாறியுள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை இம்மாதம் 30ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள நிலையில், அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இலங்கை பதிலளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமையன்றே அவ்வறிக்கையின் பிரதியொன்று இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இன்னமும் எந்தவொரு தகவலும் வெளிவராத நிலையில், பொறுப்புக்கூறல் தொடர்பில் கடந்த அரசாங்கம் காட்டிய அசட்டையீனம் குறித்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவ்வரசாங்கம் பதிலளிக்க மறுத்தமை குறித்தும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிக்கையின் உள்ளடக்கங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்படும் பதில்களும், 30ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டே அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்த் ராத் அல் ஹுஸைனை நேற்று சந்தித்து இலங்கை விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் சமரவீரவுடன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோரும் ஜெனீவா சென்றுள்ள நிலையில், இன்று ஆரம்பமாகும் பேரவையின் ஆரம்ப மாநாட்டின் போது அமைச்சர் சமரவீரவினால் முக்கிய உரையொன்றும் ஆற்றப்படவுள்ளது என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்ன தெரிவித்தார்.
ஜெனீவா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்றும் அங்கு சென்றுள்ளது. அத்துடன், ஜனாதிபதி தலைமையிலான குழுவொன்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஜெனீவா செல்லவுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக கட்டாயம் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தும் வகையில், இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான வீடியோக் காட்சிகளை ஒளிபரப்பிய செனல் 4 தொலைக்காட்சி, இலங்கைக்கு எதிராக மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதுவராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வை இலக்கு வைத்து கெல்லம் மெக்ரே தலைமையிலான குழுவினர், இலங்கைக்கு எதிரான இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அதேவேளை, அதற்காக மற்றுமொரு வீடியோ ஆவணமொன்றைத் தயாரித்து அதனை ஆங்கிலம், தமிழ், சிங்களம், பிரான்ஸ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.