அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று இலங்கைப் பயணி ஒருவரின் நடத்தை காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலே மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது:
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த பயணி ஒருவரிடம் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, பயணிகள் பெரும் களேபரத்துக்குள்ளாகினர்.
இதனால் விமானம் மீண்டும் மெல்போர்ன் விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் குறித்த இலங்கை நாட்டைச் சேர்ந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடாத்தினர். ஆனால், அவரிடம் வெடிகுண்டுகள் எதுவும் இருக்கவில்லை.
உண்மையிலேயே அந்தஇலங்கைப் பயணி குடிபோதையில் விமான பணியாளர்களிடம் தகராறு செய்திருப்பதோடு, விமானிகள் அறைக்குள்ளும் புகுவதற்கு முயற்சி செய்திருக்கிறார் என்பது விசாரணையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபரை அவுஸ்திரேலியப்பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.