கணிசமாக அதிகரித்தன கொரோனா மரணங்கள். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 06 ஆண்களும் 09 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,821 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 02 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் நாளாந்த வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்ற நிலையில், கொரோனா தொற்று பரவுவதை குறைந்த மட்டத்தில் பேணும் பொறுப்பு பொது மக்களுக்கும் சுகாதார தரப்பினருக்கும் உள்ளது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் விசேட வைத்திய நிபுணருமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது, சில அதிகரிப்புகள் காணப்படுகின்றன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தது என்றார்.
பின்னர் நாடு திறக்கப்பட்டதும் அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் அந்த நிலைமை தொடருமானால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எச்சரித்தார்.
சுகாதார வழிமுறைகள் பேணப்படாவிடின் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது என தெரிவித்த அவர், எமக்கு சில நிழற்படங்கள் கிடைத்துள்ளன. அதாவது வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு, முகக் கசவமின்றி புகைப்படம் பிடித்துள்ள படங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றார்.
சுகாதார ஊழியர்கள் என்ற வகையில் ஏனையோருக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். அனைத்து நேரங்களிலும் முகக் கவசங்களை அணிந்து, சமூக இடைவெளியைப் பேணுவது சுகாதாரப் பிரிவினருக்கு மாத்திரமல்ல. அனைவருக்கும் பொருந்தும் என்றார்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து தொற்றை ஒழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்காவிட்டால், எதிர்வரும் நாள்களில் மேலும் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.