இலங்கை: கொரனா செய்திகள்

நாளாந்தம் உயர்கின்றன கொரோனா மரணங்கள். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 16 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,328 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 19 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 04 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவக்கூடும். புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து பயணிப்பவர்கள், இந்த மாறுபாட்டை காவிச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண முடியாது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், நமது நாட்டில் நாம் செய்யும் மரபணு பரிசோதனை மூலம் மட்டுமே இந்த வைரஸைக் கண்டறிய முடியும். மாதிரிகள் மூலம் கண்டறியப்படும் வரை, வைரஸ் நாடு முழுவதும் பரவக்கூடும் என்று அவர் எச்சரித்தார். 

மேலும், நாட்டில் உள்ள மக்கள் இந்த மாறுபாட்டை காவிச் செல்கின்றனரா என்பதை அடையாளம் காண முயற்சிப்பதை விட, நாட்டுக்குள் நுழைவதற்கான வழிவகைகளைக் குறைப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சாத்தியமான முடக்கத்தைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் நாட்டை மூடும் திட்டம், சுகாதார அமைச்சிடமோ அல்லது அரசாங்கத்திடமோ இல்லை என்றும் அவர் கூறினார்.

அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை. அந்த நிலையை நாடு அடையாமல் தடுப்பது எங்களின் பொறுப்பு என்றார்.