கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மூடப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றன. அதனடிப்படையில், அநுராதபுரம் கல்வி வலயத்தில் 13 பாடசாலைகள் ஏப்ரல் 30 வரையிலும் மூடப்பட்டன அம்பாறை மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் யாவும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் மூடப்பட்டன.
உள்நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான ஒக்சிஜன், இருக்கிறது எனத் தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், உள்நாட்டில் ஒக்சிஜன் தட்டுப்பாடு இல்லையெனவும் அறிவித்துள்ளார்.
பொதுமக்களைக் கண்காணிப்பதற்காக, யாழ்ப்பாணம் நகர், புறநகர் பகுதி, பிரதான சந்திகளில், இன்று (27) காலை முதல், இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர், முகக் கவசங்கங்களை உரிய முறையில் அணியாதவர்களை எச்சரித்து, அவற்றை உரிய முறையில் அணிந்து செல்ல பணித்ததுடன், பொதுமக்கள் ஒன்றுகூடுவதையும் தடுத்தனர்.
மேலும், யாழ். நகரப் பகுதிகளில் சனநெரிசலைத் தடுக்கும் செயற்பாட்டையும் முன்னெடுத்தனர்.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தும் முகமாகவும் மக்களின் பாதுகாப்புக்காகவுமே, இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பகுதியில், இன்று (27), தெல்லிப்பளை பொலிஸாரால் கொரோனா விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, வர்த்க நிலையங்களில் வர்த்தகர்கள் செயற்படும் விதம் தொடர்பாக தௌிவூட்டப்பட்டதுடன், பஸ்களில் பயணிப்பவர்கள், சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு, விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், முகக்கவசம் அணியாதோர் கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மேலும், வவுனியாவிலும், இன்று (27) முதல், முககவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாதவர்கள், உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக, பொலிஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டாவது தொகுதி ஏற்றும் நடவடிக்கை நாளை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதென சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, சுகாதாரப் பிரிவினருக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் முதலில் ஏற்றப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.