வீரக்கெட்டிய பொலிஸ் பிரிவில் யக்கஸ்துல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து அந்தப் பிரதேசம், இன்று பிற்பகல் முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில், முடக்கப்பட்டள்ளது என வீரக்கெட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
கலவான கொடிப்பிலிக்கந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கலவான வாராந்த சந்தை மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை நகரம் முடங்கியுள்ளது. திருகோணமலை மத்திய வீதியில் கொரோனா தொற்றாளர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், நேற்றையதினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்திய வீதி ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதைவேளை மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததது.
பொலன்னறுவை கல்லேல்ல விஞ்ஞானப்பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வந்தபோது தப்பியோடிய நீர்கொழும்பு சிறைச்சாலையைச் சேர்ந்த கைதிகளில் ஐவரில் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஏனைய நால்வரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் இன்றேல் 071-8591233 அல்லது 119 இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்திக விமலரத்ன (வயது 31) நாரம்மல, கெலும் ஹப்புஹாமி (வயது 26) மாரவில, புஷ்பகுமார (வயது 36) பொரலெஸ்ஸ மற்றும் நிமல் வசந்த (வயது 52) வைக்கால.
இவர்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸ் திணைக்களம் இன்று (2) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.