வைத்தியசாலையில் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் பல்வேறு நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனரென, களுத்துறை- நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்.
இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (26) அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தனர். பின்னர் முன்னெடுக்கப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மூவரும்,பதுரலிலியைச் சேர்ந்த 76 வயது, பெல்பொலையைச் சேர்ந்த 70 வயது மற்றும் மத்துகமயைச் சேர்ந்த 83 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் 3ஆவது அலையில் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வரும்போதே, நோயின் முற்றிய நிலையிலேயே வருவதாகவும் இது மிகவும் அபாயகரமானதென்றும் எனவே மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களை அடையாளம் காண்பதற்காக, குறித்த பிரதேசங்களுக்கு சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலையில், இன்றைய தினம் இலங்கை வங்கியின் 23 கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் விசேட அறிவிப்பையும் இலங்கை வங்கி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, மேல் மாகாணத்தில் ஹொரன, இரத்மலான,குருகொட, இங்கிரிய, கொத்தட்டுவ மற்றும் வெலிவேரியஆகிய கிளைகளும் மத்திய மாகாணத்தில் கண்டி பொது வைத்தியசாலை கிளை மற்றும் திகன, வடமத்திய மாகாணத்தில் ரம்பேவ, சப்ரகமுவையில் கித்துல்கல ஆகிய கிளைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடமேல் மாகாணத்தில் வாரியபொல மற்றும் நிக்கவரெட்டிய, தெற்கில் காலி,இமதுவ, யக்கலமுல்ல, பெலியத்த,ஹம்பாந்தோட்ட, மித்தெனிய ஆகிய கிளைகளும் ஊவாவில் புத்தல, எத்தலிவெவ, ஹப்புதளை,மொனராகல மற்றும்பதுளை பிரதேச கடன் மத்திய நிலையமும் இன்று மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கொரோனா தொற்றால் எதிர்வரும் நாள்களில் தமது வங்கி கிளைகளைத் திறக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று நிலைக்கு மத்தியில், நாடு முழுவதும் முன்னிற்று சேவையாற்றும் கிராம சேவையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாமைக்கு இலங்கை கிராம சேவையாளர் சங்கம் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
அரச உயர் அதிகாரிகள் முதல் இது குறித்து அறிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியா நகரில், கொரோனா தொடர்பான சுகாதார சட்டவிதிகளை மீறுவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு, இன்று (28) காலை 10 மணிமுதல் கடுமையான நடவடிக்கைகள் தொடரப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலகொடவின் பணிப்புரைக்கமைய, நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க உடுகம சூரிய தலைமையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென, ஐந்து பேர் கொண்ட 15 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டு, நுவரெலியா நகரில் காலை முதல் சுகாதார பின்பற்றல் மற்றும் கொரோனா தொடர்பான விழிபுணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன், கொரோனா சட்ட விதிகளை மீறுவோறுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தீவிர சிகிச்சை பிரிவுகளுடன் கூடிய நடமாடும் வைத்தியசாலையை அமைப்பதில் கவனம் செலுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கோரியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அத்துடன், கொவிட் 19 ஒழிப்பு குழுவின் இறுதிக் கூட்டம் எப்போது நடத்தப்பட்டது என்றும் அவர் இதன்போது, கேள்வி எழுப்பியுள்ளார்.