கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள கொவிட்-19 நிலைமையின் காரணமாக சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு அதன் செயற்பாட்டு நேரத்தை தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மட்டுப்படுத்துகின்றது. எதிர்வரும் வாரங்களில், கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள், அவசரமான / உண்மையான தேவைகளை உடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
இலங்கை கடல்பரப்பில் அத்துமீறிய நுழைய முற்பட்ட 86 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டீ சில்வா தெரிவித்துள்ளார். கடல்வழியாக சட்டவிரோதமாக வருபவர்களால் நாட்டுக்குள் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனைத் தடுப்பதற்காக 24 மணிநேரமும் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மன்னார் தெற்கு கடல் பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே நாட்டுக்குள் நுழைந்த 11 இந்திய மீன்பிடிப் படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.