நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று(12) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று(10) அறிவிக்கப்பட்டது. எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக, இந்த வருடம் இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக, அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவுகளை தற்போதே முன்னெடுத்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசிகள் பல டோஸ்கள் செலுத்தப்பட வேண்டுமென அந்த நாடுகள் நம்புவதாகவும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர், கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். அவர்களில் அதிகமானோர் குளியாப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 29,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.