இலங்கை: கொரனா செய்திகள்

கண்டியில் உள்ள ஆலயமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில், இன்று காலை ஆதிவாசிகள் மக்கள் குழு, தங்கள் தலைவருடன் சேர்ந்து தடுப்பூசி பெற்றுக்கொண்டது.

ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடத்தப்படும் வருடாந்த எசல பெரஹேராவின் தொடக்க விழாக்களில் பங்கேற்கவுள்ளதால் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதேவேளை,  முற்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கையாக வ வருடாந்த எசல பெரஹேராவின் பங்கேற்றும் ஏனையவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 45,532 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர்களில் 67 பேர் கண்டியிலும் 56 பேர் கம்பளையிலும் 43  பேர் குளியாபிட்டியிலும் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.

களுத்துறை, கம்பஹா, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(30) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மின்னேரித்தன்ன கிராம சேவகர் பிரிவு, கம்பஹாவின் சியம்பலாப்பே வத்தை – உப்புல்வசந்த வீதி, மாத்தளை – லக்கலை – கிருளுவீதிய மற்றும் குருவெல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவில் உள்ள டென்ஸ்வோர்த் தோட்டம் என்பனவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.