தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட்-19 ஒழிப்பு விசேட குழுவுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (09) இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, ஜூலை மாதத்துக்குள் கிடைக்கும் தடுப்பூசிகளை அம்மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜூலை 11ஆம் திகதி கிடைக்கவிருக்கும் 2 மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகளை, கொழும்பு மாவட்டத்துக்கு 2 இலட்சம், கம்பஹாவுக்கு 5 இலட்சம், களுத்துறைக்கு 5 இலட்சம் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி தெரிவித்தார்.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, மாத்தளை மாவட்டங்களுக்குத் தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும் குருநாகல் மாவட்டத்துக்கு இரண்டு இலட்சம் தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தடுப்பூசிகளை, முறையாகவும் விரைவாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தை, சுகாதாரத் துறையினருக்கு ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில், 1.47 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. இவற்றில் 6 இலட்சம் தடுப்பூசிகள், ஏற்கெனவே முதலாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும்.
மீதமுள்ளவற்றை, கேகாலை மாவட்ட மக்களுக்காக, முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கென வழங்குமாறும், ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஃபைசர் தடுப்பூசிகளை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் மொடர்னா தடுப்பூசிகளைக் கண்டி மாவட்டத்துக்கும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பின்னர் கிடைக்கவிருக்கும் தடுப்பூசிகளை, கொவிட் பரவலைக் கருத்திற்கொண்டு, விஞ்ஞானபூர்வமாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.
இதேவேளை, தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், தூதரகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டியதன் தேவை பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 10 இலட்சம் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி, எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மீதமுள்ள 600,000 தடுப்பூசிகளை கொழும்பு பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகித்த பின்னர் கேகாலை பகுதி மக்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வரவிருக்கும் ஃபைசர் தடுப்பூசி வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் பிரதேசத்தில் நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பொத்துவில் பிரதேசத்தின் பாக்கியத்தை P -13 எனும் கிராம சேவையாளர் பிரிவு நேற்று (09) இரவு 8.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் கொரோனா விசேட தடுப்பு செயலணியினரின் விஷேட கூட்டம் பொத்துவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.யு. அப்துல் சமட் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ் எம். அப்துல் மலிகின் ஒருங்கிணைப்பில் சுகாதார வைத்திய அதிகாரியின் கேட்போர் கூடத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள கிராம சேவையாளர் பிரிவில் வசிப்பவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வது மற்றும் வெளியிடங்களில் வாசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்துக்குள் பிரவேசிப்பது என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(10) அதிகாலை 6 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.