1.7மில்லியன் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி டோஸ்கள், எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளன என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டு மக்களில் 57 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், மேல் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இம்மாதக் கடைசிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
337,445 பேருக்கு நேற்றையதினம் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது நாட்டில், அதிகூடிய கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நாளாகும் என அப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையின் அடிப்படையில் தெரியவருகிறது.
சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 289,122 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 32,385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்புட்ணிக் 5 தடுப்பூசியின் முதலாவது டோஸ் 15,202 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 700 பேருக்கும் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 36 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
காத்தான்குடியில் முடக்கப்பட்டிருந்த மேலும் மூன்று கிராம சேவகர் பிரிவுகள், இன்று (14) காலை 6 மணியுடன் விடுவிக்கப்பட்டன.
புதிய காத்தான்குடி வடக்கு 167ஏ, புதிய காத்தான்குடி தெற்கு 167சி மற்றும் புதிய காத்தான்குடி கிழக்கு 167பி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட கிராம சேவகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டதுடன், இயல்பு நிலையும் காணப்பட்டது. போடப்பட்டிருந்த தடைகளும் அகற்றப்பட்டன.
காத்தான்குடியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடந்த மாதம் 23ஆம் திகதி எட்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.
இதில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள், கடந்த 8ஆம் திகதி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.