நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் இது தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.
கொழும்பில் சேகரிக்கப்படும் 10 மாதிரிகளில், இரண்டு அல்லது மூன்று பேர் டெல்டா தொற்றுக்குள்ளாகியிருந்தால், அது 30 சதவீதம் என்று குறிப்பிடப்படலாம் என்று கூறிய அவர், கொழும்பு பகுதியில் இருபது முதல் முப்பது சதவீதம் பேர் வரை இருக்கலாம் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபு பல்கலைக்கழகம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, காலி, மாத்தறை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் ஏனைய பகுதிகளில் இந்த வைரஸ் இல்லை எனக் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் இதுவரை 2,250 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளான கர்ப்பிணிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என, குடும்ப நல சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ராமாலி த சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, தொற்றுக்கான அறிகுறி காணப்படுமாயின், உடனடியாக கர்ப்பிணிகள் சிகிச்சை நிலையங்களுக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியா நகரசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கமும் சுகாதாரத்துறையும் பாராமுகமாக செயங்படுவதாக, வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், இராணுவம் பொலிஸார் உட்பட பலருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
ஆயினும், முன்களப் பணியாளர்களாக செயற்பட்டு வருகின்ற எமது சுகாதார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், அண்மையில், இராணுவத்தால் ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், அதிலும் எமது ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும் சாடினார்.
‘ஏற்கெனவே கடந்த மாதம் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு பணியாற்றும் 16 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. மீளவும் இவ்வாறு தொற்று ஏற்ப்படும் சந்தர்ப்பத்தில் அது பரவலடைந்து நகர் முழுவதும் பாரிய சமூகத் தொற்றாக மாறும் அபாயநிலை காணப்படுகின்றது’ என்றும், க.சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.