கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டது.
இப்பிராந்தியத்தில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொவிட் தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்தியத்துக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு பொதுமக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், அரச முன்னிலை உத்தியோகத்தர்கள் போன்றோருக்கு ஏற்றப்பட்டன.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வழங்கப்பட்ட 3,500 தடுப்பூசிகளுள் முதல் நாளின் போது ,1787 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இரண்டாம் நாளில் மீதமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இவற்றுக்கு மேலாக மேலும் 1,200 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் கல்முனைப் பிராந்திய பணிமனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நான்கு மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அக்கரைப்பற்று சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் போன்றவற்றில் இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுகின்றன.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாடசாலைகளில் சுமார் 888 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வித்துறை அதிகாரிகள், கல்விசார உத்தியோகத்தர்கள் என வகைப்படுத்தப்பட்டோர் இவ்வாறு தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 12 பேர் மரணித்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பெண்கள் அறுவர் உள்ளனர். கடந்த 22ஆம் திகதியும் நேற்று (24) ஆம் திகதியுமே இம்மரணங்கள் பதியப்பட்டுள்ளன. மரணமடைந்த 12 பேரும், 58 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.