நாடு, தற்போது முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலைமை, இன்னும் இரண்டொரு வாரங்களில் பன்மடங்குகளால் அதிகரித்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் ஏற்பட்டிருக்கும் இடநெருக்கடி, அதனால் ஏனைய தொற்றாளர்கள் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு அச்சம் கொள்கின்றனர். இதன் காரணமாக, கொரோனா தொற்றாளர்களின் மரண வீதம் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலைகளில் போதுமான அளவுக்கு ஒட்சிசன் தற்போது இருந்தாலும், இன்னும் ஓரிரு வாரங்களில் ஏற்படும் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக, பார்த்துகொண்டிருக்கும் போதே நோயாளர்கள் மரணிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை எனில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது: அது மிக பயங்கரமானதாக இருக்கும் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
“வைத்தியசாலை பணியாளர்கள், தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றமை இன்னும் பயங்கரமானது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மேலும் 1,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,992 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,161 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 295,518 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 31,293 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, மேலும் 94 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 5,111 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்களை விட இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்று ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனேத் அங்கம்பொடி தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து பதிவான தொற்றாளர்களை விட இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் பதிவான கொவிட் மரண வீதம் இந்தியாவில் பதிவான இறப்புகளை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் கொவிட் விரிவாக்கத்தின் உச்சத்தில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களை விட இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.