முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முள்ளியவளை பிரதேச வர்த்த சங்கமும் தமது ஆழுகையின் கீழ் உள்ள வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கத் தலைவர் த.தேவராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானித்துள்ளதாகவும், எனவே மக்கள் இன்றும்(20) நாளையும் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யலாம் “என்றும் தெரிவித்தார்.
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர்,தாதியர்கள் 06 பேர் மற்றும் 04 வைத்தியர்கள் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வைத்தியசாலையில், கொரோனா தொற்று நோயாளர் வார்ட்டில் அதிகளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், வைத்திய சேவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில், இன்று (20) இரவு 10 மணிமுதல், எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டாலும் கண்டி எசல பெரஹரா முன்னெடுக்கப்படும். பொதுமக்கள் பங்குப்பற்றல் இன்றி, எசல பெரஹரா நடைபெறும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.