நாட்டை மூடியதன் முடிவுகள் தெரிவதற்கு குறைந்தது இரண்டு வாரங்கள் செல்லும் என்று தெரிவித்த அவர், நாட்டை மூடுவதன் விளைவுகளை இன்றோ அல்லது நாளையோ எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்களை வீட்டிலேயே இருக்குமாறும் தேவையற்ற போக்குவரத்தை தவிர்க்குமறும் அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசி போடப்படாத அனைவரும் இந்த நேரத்தில் தடுப்பூசி பெற ஆர்வம் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
விசேடமாக 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடுவது முக்கியம் என்றும், கொரோனாவிலிருந்து விடுபட தடுப்பூசியே பிரதான தீர்வு என்றும் கூறினார்.
இலங்கையில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் சுகாதார துறையின் அங்கீகாரம் பெற்றவை என்பதால், அவற்றை தேர்ந்தெடுக்க முயலாமல் எந்தத் தடுப்பூசியையாவது பெற்றுக் கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
மலையகத்தின் பெரும்பாலான நகரங்களில் அத்தியாவசிய தேவைக்கான வர்த்தக
நிலையங்கள் மாத்திரம் இன்று (23) திறந்திருந்தன.
இதற்கமைய, கினிகத்தேனை நகரில் மக்கள் நடமாட்டம் இல்லாவிடினும் தனியார்
கிளினிக் நிலையங்கள், பாமசிகள், வங்கிகள், தபால் நிலையம் என்பன திறந்திருந்தன.
அத்துடன்,தியகல பொலிஸ் சோதனைச் சாவடியில், சோதனை நடவடிக்கைகள்
பலப்படுத்தப்பட்டன.
தேவையற்ற பயணங்களை மேற்கொள்வோர்,குறித்த பொலிஸ் சோதனை சாவடியில்
வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதேவேளை, நுவரெலியா – கந்தப்பளை நகரிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சமையல் எரிவாளு முகவர் நிலையங்கள் என்பன திறக்கப்பட்டிருந்ததுடன், நடமாடும் வாகனங்கள் ஊடாக பழங்கள், மரக்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களும் விற்பனை செய்யப்பட்டன.
அத்தியாவசிய சேவைகளுக்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தாலும், கொழும்பு மாநகரம் உட்பட புறநகர்ப் பகுதிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதி, ஹைலெவல் வீதி, கொழும்பு – காலி வீதி ஆகியவற்றில் வழமைபோல் வாகன நெரிசல் இல்லை என்று பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வீதிகளில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே பயணிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன், திறக்க அனுமதிக்கப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே மக்கள் தென்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.