நாட்டில் மேலும் 1,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,769 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 388,278 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 68,351 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அச்சட்டத்தை மீறி, மொனராகலைக்கு அதிகளவானோர் வாகனங்கள் மூலம் வருகைத் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொனராகலை மாவடத்தில் 16,000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 115 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், மொனராகலை நகருக்குள் வருகைத் தரும் வாகனங்கள் மற்றும் மக்களால் தொற்று பரவுவது அதிகரித்துள்ளதென சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எந்த தடுப்பூசி விரைவாக கிடைக்கிறதோ, அதனை பெற்றுக் கொள்ளுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். சைனோஃபாம் தடுப்பூசி தொடர்பில் பொது மக்களிடையே காணப்படும் ஐயப்பாடு தொடர்பில் கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் ஐந்து வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் இன்று வரை இலங்கையில் 10 மில்லியன் மக்களுக்கு சைனோஃபாம் தடுப்பூசி தான் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
எனவே, தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் தடுப்பூசிகளிடையே வேறுபாடுகள் காணப்படாது எனத் தெரிவித்த அவர், ஆனால் நாங்கள் இந்தத் தடுப்பூசியை தான் போடுவோம் என பார்த்துக் கொண்டிருக்காது, எந்தத் தடுப்பூசி எமக்கு விரைவாக கிடைக்கின்றதோ, அந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முன்வரவேண்டுமெனவும் கூறினார்.
‘சைனோஃபாம் தடுப்பூசி பற்றி பொது மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம், ஒரு ஐயப்பாடு நிலவுகின்றது. இது சீனத் தயாரிப்பு எந்தளவுக்கு இது நோயை குறைக்கும் என்ற ஐயம் காணப்படுகின்றது
‘இது சீனாவில் மட்டுமல்லாது பல நாடுகளில் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படுகின்றது. அதாவது, பல நாடுகளில் சைனோ.பாம் தடுப்பூசி வழங்கப்பட்டதன் மூலம் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
‘எனவே, இந்த தடுப்பூசி தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், சைனோஃபாம் தடுப்பூசி மூலம் இறப்புகளையும் நோய் தாக்கத்தையும் குறைக்க முடியும் என தெரியவந்துள்ளது’ என்றார்.