நாளை நாடு மீண்டும் திறக்கப்பட்டாலும், மக்கள் தொடர்ந்து ஐந்து அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பது அவசியமாகும் என்று, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமைஇ எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜவந்திர தெரிவித்தார். இல்லையென்றால், எதிர்காலத்தில் ஆபத்தான சூழ்நிலைகள் மீண்டும் நிகழலாம் என்றும் கூறினார். மேலும், தடுப்பூசி பெறாதவர்கள், அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, தடுப்பூசியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், நாளை (01) நீக்கப்படும் பட்சத்தில், சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பொதுமக்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் கேட்டுக்கொண்டார். அத்துடன், சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.
மொனராகலை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் துசித அத்தனாயக்க தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாளாந்தம் 300- 500 தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்பட்ட நிலையில், மரணங்களும் நாளொன்றுக்கு மூன்றாக பதிவாகிவந்தன. எனினும் கடந்த வாரம் மொனராகலை சுகாதாரப் பிரிவில் 50-75 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டதுடன், ஒரு மரணம் மாத்திரமே பதிவாகியுள்ளது. இதுவரை மொனராகலை மாவட்டத்தில் 18,735 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.