கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று, கொரோனா வைரஸ் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான சுகாதார வழிமுறைகள் அடங்கிய சுற்றுநிரூபம், இன்னும் 48 மணிநேரங்களுக்குள் வெளியிடப்படும் என்றும், மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, நிலக்கீழ் நீர் மட்டம் மிகவும் ஆழத்தில் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட மன்னார், காத்தான்குடி போன்ற இரண்டு பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும் மேற்படி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டதும், அப்பிரதேசங்களில் நல்லடக்கப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இரு பிரதேசங்களினதும் நிலக்கீழ் நீர்மட்டம், 15 மீற்றர் ஆழத்துக்குக் கீழேயே காணப்படுகின்றது என்றும், அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று முன்தினம் (27) வரையில், இலங்கையில் 464 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவற்றில் 120 மரணங்கள், முஸ்லிம்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றல் பணிகளுக்கு, அரசியல் ரீதியில் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, உடனடியாக இந்த அரசியல் தலையீட்டுப் பிரச்சினையைத் தடுத்து நிறுத்தாவிடின், தடுப்பூசி ஏற்றல் பணியிலிருந்து தமது சங்கம் விலகியிருக்கு என்றும் அச்சங்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மேற்படி சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக, தடுப்பூசிக் கொத்தணியொன்று உருவாகுவதைத் தடுக்க முடியாது என்றார்.
உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அமைச்சின் ஆலோசனைகள், பரிந்துரைகளின் பிரகாரம், உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி ஏற்றல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சில அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரசியல் தலையீடுகள் காரணமாக, தடுப்பூசி ஏற்றலுக்காகப் பதியப்பட்டுள்ள பொதுமக்களின் பெயர்ப் பட்டியல்கள் அனைத்தையும் மாற்றவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதென்றும் இதனால், மக்கள் மத்தியில் அமைதியின்மை தோன்றியுள்ளதாகவும், தடுப்பூசி ஏற்றப்படும் சில நிலையங்கள், இதனால் யுத்தகளம் போன்று காட்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தடுப்பூசி ஏற்றப்படும் இடங்களில் காணப்படும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, தடுப்பூசிக் கொத்தணியொன்று உருவாக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ள அவர், இவ்வாறான பிரச்சினையொன்று உருவானால், அதற்கு பிரதேச அரசியல் தலைமைகளே பொறுப்புக்கூற வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.